காடையூர் பெயர் வரலாறு

வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

 

வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மாவின் சன்னதி   புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில்  உள்ளது.  காடையூர் என்ற பெயர் ஏற்பட்டதின் காரணமும் ஒரு அதிசய நிகழ்வுதான்.

 

முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். அந்த கால யுத்தங்களில் யானைப் படையே வலிமையான படையாகும் என்பார்கள். ஆனால் நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர். ஆகவே பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமான் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து வந்து அந்த யானைகளை தாக்கலானார்.

 

சாதாரணமாக யானைகள் தமக்கிட்ட பணியில் கவனமாக இருக்கும். ஆனால் தம்முடைய கண்களையும், காதுகளையும் கொத்திக் கொத்தி நூற்றுக்கணக்கான காடைக் குருவிகள் காயப்படுத்தியதைக் கண்டு கோபமுற்ற யானைகள் செய்வதறியாமல் பிளிரத் துவங்கி மதம் பிடித்து தம்மை அழைத்து வந்த படையினரையே திருப்பித் தாக்கத் துவங்க, படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்துபோய்  எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம்  பிடித்தானாம். இதனால் மன்னனைக் காத்த காடைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது  காடையூர் என்ற பெயராயிற்று  என்பதாக கர்ண வழிப் பரம்பரைக் கதை உண்டு.

 

இதனால்தான் காடையூர் சிவபெருமான் ஆலயத்தில் முழுக்காதன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் வழிபடும் பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் மற்றும் அவர்களது குலதெய்வமான வெள்ளையம்மாள் சன்னதியும் உள்ளது.  காடையீஸ்வரரே  மன்னனுக்கு யுத்தத்தில் குருவி உருவில் வந்து உதவிய சிவபெருமான் ஆவார் என்ற நம்பிக்கையும் உண்டு. பங்கசாக்ஷி சிவபெருமானின் மனைவியான பார்வதியே.