திருவாதிரை நோன்பு – ஆருத்ரா தரிசனம்

திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும். அத்துடன், திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழித் திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை ஒட்டியே சிவபெருமானை ஆதிரையின்  தல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.

பூஜை நேரம்

நமது காடேஸ்வரர் கோவிலில் மார்கழி 18 செவ்வாய் 02-01-2018 அதிகாலை 4 – 6 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரின் திருவருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருமங்கள்யா நோன்பு மார்கழி 17 திங்கள் 1.1.2018 அன்று மாலை 4.30 முதல் 7.00 மணிக்குள் சந்திரனை தரிசனம் செய்து மாங்கல்ய சரடு கட்டிக்கொள்ளலாம் சுபம்.

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் தஷிணாயனத்தின் இறுதி மாதமாகும். மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில் கோவில் கொண்டருளிய நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்றுகூடுவதாக ஐதீகம் உண்டு. தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதாகும். இக்காலத்தில் (வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகின்றது. அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்றும் அழைப்பர்.

சைவர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சைவர்களுக்கு மட்டுமல்லாமல் வைஷ்ணவர்களுக்கும் இம்மாதம் சிறப்புக்குரியதாகும். சுவர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் இம்மாத்திலேயே கடைப்பிடிக்கப்படுகின்றது. கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றாள். இதனை சிறப்புடைய மார்கழி மாதத்து ஆதிரை நாள் என்று அழைக்கப்படும்.

 

மார்கழி அம்மாவாசை

தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். இம்மாதம் தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

மார்கழி அம்மாவாசை பூஜை நமது காடேஸ்வரர் கோவிலில் 17.12.2017 அன்று மார்கழி அம்மாவாசை முதல் கால பூஜை காலை 5 மணிக்கு நடைபெறும். உச்சி கால பூஜை மதியம் 12 மணிக்கு நடைபெறும்.

ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.

மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில் வேதங்களுக்குப் பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.

இம்மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில் என்றும் பதினாறு மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய இம்மாதம் சிறந்தாகக் கருதப்படுகிறது.

அன்னதானம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. அக்னி ரூபமாய் போற்றப்படும் சிவனுக்கும், அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம் பக்தர்களால் போற்றப்படுகிறது.

கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் கிருத்திகா நட்சத்திரத்தில் கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழா 02.12.2017 சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம் பூஜை நமது காடேஸ்வரர் கோவிலில் 2-12-2017 மாலை நான்கு மணிக்கு நடை பெற உள்ளது. அனைத்து பக்தர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

அகல் விளக்கேற்றி: 

கார்த்திகை திருநாளன்று வீடுகள் தோறும் அகல் விளக்கால் அலங்கரிக்கப்படும். இந்த நாளன்று நெல் பொரியும், அவல் பொரியும் வெல்லப்பாகிலிட்டு பரம்பொருளான சிவ பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கம்.

திருவண்ணாமலையில் கார்த்திகை:

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. கார்த்திகை தினத்தன்று தமிழகத்தின் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். எங்கெங்கு காணினும் விளக்குதான். விளக்கின் ஒளி புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். கார்த்திகை தினத்தன்று மாலை அகல் விளக்குகளுக்கு குங்குமப் பொட்டு வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றி,பஞ்சாலோ, திரியாலோ ஆன திரியைப் போட்டு பூஜை செய்து, விளக்கு ஏற்றப்பட்டு வீட்டின் அறைகளிலும், ஜன்னல்களிலும், வாசலிலும் ஏற்றி வைக்கப்படும். அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் கண் கொள்ளா காட்சியாக இருக்கும். இரவை பகலாக்கும் இந்த தீபத் திருநாள் 3 நாள் கொண்டாடுப்படுகிறது.

கார்த்திகை விளக்கின் தத்துவம் : 

எண்ணெய் கரைகிறது, திரி கருகுகிறது. ஆம்… தீபம் என்பது தன்னை கரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ஒளி வழங்குகிறது. பிறர் நலம் பேணுவதற்காக தான் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்பது கார்த்திகை தீபத் தத்துவம்.

தீபம் ஏற்றும் முறை : 

திருக்கார்த்திகை திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்குத் திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். எக்காரணம் கொண்டும் தெற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றக்கூடாது.

தீபத்திருநாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்.

மூன்று முகம் ஏற்றினால் – புத்திர தோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்.

ஐந்து முகம் ஏற்றினால் – சகல நன்மைகளும் உண்டாகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த திருக்கார்த்திகை நன்னாளில் விளக்கேற்றி… வாழ்வில் வளம் பெறுவோமாக!

காடையூர் பெயர் வரலாறு

வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ  பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

 

வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மாவின் சன்னதி   புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில்  உள்ளது.  காடையூர் என்ற பெயர் ஏற்பட்டதின் காரணமும் ஒரு அதிசய நிகழ்வுதான்.

 

முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். அந்த கால யுத்தங்களில் யானைப் படையே வலிமையான படையாகும் என்பார்கள். ஆனால் நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர். ஆகவே பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமான் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து வந்து அந்த யானைகளை தாக்கலானார்.

 

சாதாரணமாக யானைகள் தமக்கிட்ட பணியில் கவனமாக இருக்கும். ஆனால் தம்முடைய கண்களையும், காதுகளையும் கொத்திக் கொத்தி நூற்றுக்கணக்கான காடைக் குருவிகள் காயப்படுத்தியதைக் கண்டு கோபமுற்ற யானைகள் செய்வதறியாமல் பிளிரத் துவங்கி மதம் பிடித்து தம்மை அழைத்து வந்த படையினரையே திருப்பித் தாக்கத் துவங்க, படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்துபோய்  எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம்  பிடித்தானாம். இதனால் மன்னனைக் காத்த காடைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது  காடையூர் என்ற பெயராயிற்று  என்பதாக கர்ண வழிப் பரம்பரைக் கதை உண்டு.

 

இதனால்தான் காடையூர் சிவபெருமான் ஆலயத்தில் முழுக்காதன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் வழிபடும் பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் மற்றும் அவர்களது குலதெய்வமான வெள்ளையம்மாள் சன்னதியும் உள்ளது.  காடையீஸ்வரரே  மன்னனுக்கு யுத்தத்தில் குருவி உருவில் வந்து உதவிய சிவபெருமான் ஆவார் என்ற நம்பிக்கையும் உண்டு. பங்கசாக்ஷி சிவபெருமானின் மனைவியான பார்வதியே.

குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு

குலதெய்வம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமானதாகவும்  தவிர்க்க முடியாததாகவும் சொல்லப்படுகிறது. ஒருவர் எவ்வளவு பூஜைகள் செய்தாலும் எத்தனை பரிகாரங்கள் செய்தாலும் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாமல் போனால் அந்த பூஜைகளும் பரிகாரங்களும் பலன் தராது என்பதே ஜோதிட சாஸ்திரத்தின் அசைக்க முடியாத கருத்து.    இதற்காகத்தான்  குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுக்கிரகமும் இல்லை என்றும் குல தெய்வ வழிபாடு கோடிதெய்வ வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது.

ஜாதக கட்டங்களில் குறைகள் இல்லாத நிலையிலும் கிரக சஞ்சாரங்களில் பாதக சூழ்நிலைகள் இல்லாத நிலையிலும் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்சனைகளும் தொடர்கின்றது என்றால் அதற்கு குல தெய்வ தோஷம் காரணமாக இருக்கும். அதே போல  கிரகங்களின் கோசார பலன்களும்.கிரக பெயர்ச்சியின் நல்ல பலன்களும் முழுமையாக   பலன் தர வேண்டுமென்றால் அதற்கு குலதெய்வ அனுக்கிரகம் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.